அவசர சிகிச்சைக்கு பயன்படாத எம்.ரெட்டியபட்டி 108 ஆம்புலன்ஸ்: அவதியில் நோயாளிகள்

திருச்சுழி: திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி பகுதிகளுக்கு உரிய 108 ஆம்புலன்ஸ் இரவு நேரங்களில், அருப்புக்கோட்டை, திருச்சுழியில் நிற்பதால் அவசரத்திற்கு பயன்படாமல் உள்ளது என நோயாளிகள் புலம்புகின்றனர்.

திருச்சுழி அருகே கல்லுாரணி, எம்.ரெட்டியபட்டி, பரளச்சி பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேர்த்து ஒரே ஒரு 108 ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. 7 ஆண்டுகளாக எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு அவசரத்திற்கு சென்று நோயாளிகளை சேர்த்த பின் மீண்டும் இரவு நேரத்தில் இங்கே நிறுத்தப்படும்.

இந்நிலையில் 2 ஆண்டுகளாக கல்லுாரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது இங்கிருந்து அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அல்லது திருச்சுழி அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு வருகிறது. இதில், பணிபுரியும் டிரைவர், நர்சுகளுக்கு அந்தந்த மருத்துவமனையில் தங்குவதற்குரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு உள்ளது.

ஆனால் கல்லூரணி நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை 10 நாட்களாக மூடிவிட்டனர். அவர்களுக்கு வேறு இடத்தையும் ஒதுக்கவில்லை. இதனால் போதிய வசதி இல்லாததால் பணியாளர்கள் ஆம்புலன்ஸ்சை அருப்புக்கோட்டை அல்லது திருச்சுழியில் நிறுத்தி விடுகின்றனர்.

இதனால், ரெட்டியபட்டி, பரளச்சி பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உதவி தேவை என்றால் 20 கி.மீ., தள்ளி உள்ள அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளிலிருந்து தான் வர வேண்டி உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் இருந்தும் அவசர சிகிச்சைக்கு உதவ முடியாமல் போகிறது.

மாவட்ட மருத்துவ நிர்வாகம் பணியாளர்களுக்கு அவர்கள் ஆம்புலன்ஸ் வேலை நிறுத்தும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்.

Advertisement