கோயில் விழாவில் கருத்து வேறுபாடு: சாலை மறியல் போராட்டம்

எழுமலை: எழுமலை செல்லாயிபுரத்தில் செல்லாயியம்மன் கோயில் உள்ளது. கிராமத்தில் வசிக்கும் ஒரே சமூகத்தினரைச் சேர்ந்தவர்களிடையே புரட்டாசி பொங்கல் வழிபாடு நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு பிரிவினராக பிரிந்து திருவிழா கொண்டாடுகின்றனர்.

் கடந்த வாரம் அக்.13, 14,ல் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தினர். அக். 20, 21, 22 ஆகிய நாட்களில் அடுத்த பிரிவினர் திருவிழா அறிவித்துள்ளனர். கடந்த வாரம் திருவிழா நடத்தியவர்கள் கோயில் முன்பகுதியில் போட்டிருந்த அலங்கார பந்தல்களை பிரித்து எடுக்கவில்லை.

நாங்கள் வழிபாடு நடத்த பந்தல் அலங்காரத்தை அகற்ற வேண்டும் என நேற்று காலை 11.00 மணியளவில் எழுமலை ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.ராமநாதபுரம் போலீசார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.

தொடர்ந்து பேரையூர் தாசில்தார் முகிபாலன், உசிலம்பட்டி டி.எஸ்.பி., ஜெயகணேசன் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அலங்கார பந்தல்களை இன்று அக். 19 ல், அகற்றவும், அடுத்து திருவிழா நடத்த உள்ளவர்கள் அலங்காரம் செய்து கொள்ளலாம் எனவும் முடிவெடுத்தனர். மறியலால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement