பள்ளி மாணவர்களுக்கு விற்க இருந்த 600 போதை மாத்திரைகள் பறிமுதல்
திருநெல்வேலி:
திருநெல்வேலி உத்தமபாண்டியன்குளம் பஸ் ஸ்டாப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 4 பேரை போலீசார் விசாரிக்க முயன்றனர். அவர்கள் தப்பியோட முயன்றதால் எஸ்.ஐ., தங்கப்பராஜா மற்றும் போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்தனர்.
விசாரணையில் சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் ஆதித்தன் 22, ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் 19, காஞ்சிபுரம் கோவிலாம்பாக்கத்தைச் சேர்ந்த சேர்ந்த ரிஷிகேஷ் 19, மற்றும் 17 வயது சிறுவன் எனத்தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 50 நைடாசன், 350 டைடால், 200 டாப்கார்டு என மொத்தம் 600 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போதை ஏற்ற பள்ளி மாணவர்களுக்கு அவற்றை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.
போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன, பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.