ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!

நமது நிருபர்




ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கான பயோமெட்ரிக் பதிவு நடைமுறை இன்று ( அக்., 26) முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் கைரேகை, முகப்பதிவு உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கும், அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தாது.

பயோமெட்ரிக் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கும். அதன்பின், இந்தியாவில் உள்ள 16 பயோமெட்ரிக் சேகரிப்பு மையங்களில் ஒன்றில் நேரில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுள்ளவர்கள் 'ஆஸ்திரேலியன் இம்மி' செயலி வாயிலாகவும் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.

ஆஸ்திரேலியா ஏற்கனவே 60 நாடுகளைச் சேர்ந்த விசா விண்ணப்பதாரர்களிடம் பயோமெட்ரிக் தகவல்களைச் சேகரித்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கும் இந்நடைமுறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அடையாள மோசடிகளைத் தடுப்பது, விசா நடைமுறையின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்த பின்னரே பயோமெட்ரிக் பதிவுக்கான முன்பதிவை மேற்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement