சேதமடைந்த பாசன கால்வாய்: சீரமைத்தால் விவசாயிகள் பயன்

கூடலுார்: கூடலுார், புளியாம்பாறை அருகே சேதமடைந்த பாசன நீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கூடலுார் புளியாம்பாறை மற்றும் கொட்டகுன்னி, அத்துார் பகுதி மக்கள், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். வயல்களில், கோடையில் காய்கறியும், பருவமழையில் நெல் விவசாயம் செய்து வந்தனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை, இடுப் பொருள்கள் விலை உயர்வு, காட்டு யானைகளால் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நெல் விவசாயத்தை கைவிட்டு காய்கறி மற்றும் வாழை, இஞ்சி பயிரிட்டு வருகின்றனர். கோடையில், போதிய பாசன நீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர்.

இதற்குத் தீர்வு காணும் வகையில், கொட்டகொன்னி வழியாக செல்லும் நீரோடை குறுக்கே சிறு தடுப்பணை அமைத்து, சிமென்ட் பாசன கால்வாய் வழியாக விவசாயிகளுக்கு பாசன நீர் வழங்கி வந்தனர். பாசன நீர் கால்வாய், தொடர் பராமரிப்பு இன்றி பல இடங்களில் சேதமடைந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளுக்கு பாசன நீர் சென்றடைவதில்லை. விவசாயிகள் கோடையில் பாசன நீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

விவசாயி சிவசங்கரன் கூறுகையில், ''இப்பகுதியில் அமைக்கப்பட்ட பாசன நீர் கால்வாய் மூலம், கோடையில் விவசாயத்துக்கு தேவையான பாசன நீர் கிடைத்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, கால்வாய் சேதமடைந்துள்ளது. விவசாயிகள் கோடைகாலத்தில் பாசன நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, தடுப்பணையை பராமரித்து, பாசன நீர் கால்வாயை சீரமமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

Advertisement