தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி

கூடலுார்:

முதுமலை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் சேதமடைந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதுமலை மைசூரு தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய சாலை வழிதடமாகும். கர்நாடகா மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் இவ்வழியாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.

முதுமலைக்கு உட்பட்ட தொரப்பள்ளி முதல், கக்கநல்லா வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனை நெடுஞ்சாலை துறையினர் அவப்போது ஜல்லி கற்கள் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தாலும் மீண்டும் சேதமடைந்து வருகிறது. இப்பகுதியை கடந்து செல்ல சுற்றுலா பயணிகள், ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணி செந்தில்நாதன் கூறுகையில்,‘‘இச்சாலையில் அவ்வப்போது பயணித்து வருகிறோம். தற்போது சேதமடைந்துள்ள பகுதியை கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இரவில் விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே, சேதமடைந்த பகுதிகளை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,’’ என்றார்.

தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார் கூறுகையில், ‘‘சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாக சீரமைத்து வருகிறோம். அப்பகுதியை நிரந்தரமாக சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’’என்றார்.

Advertisement