காவலர் வீர வணக்க நினைவு மாரத்தான்

மதுரை: மதுரையில் பணியின்போது மரணம் அடைந்த போலீசாரின் தியாகத்தை நினைவுகூறும் வகையிலும், பொதுமக்கள் - காவல் துறைக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தவும், மாவட்ட போலீஸ் சார்பில் 'நம்ம மதுரை நம்ம போலீஸ்' இயக்க நினைவு மாரத்தான் நடந்தது.

ஆயுதப்படை மைதானத்தில் காலை 6:00 மணிக்கு எஸ்.பி., தேவநாதன் துவக்கி வைத்து, போட்டியில் பங்கேற்றார். அய்யர்பங்களா வழியாக மீண்டும் ஆயுதப்படை மைதானம் வந்தடையும் வகையில் 5 கி.மீ., ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார், பொதுமக்கள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை உற்சாகப்படுத்த, வழியெங்கும் போலீசார் 'பேண்ட்' இசை வாசித்ததோடு குடிநீர் பாட்டில்கள், புரூட் சாலட், குளுக்கோஸ் வழங்கினர்.

ஆண், பெண் பிரிவுகளில் முதல் 3 இடங்கள், முதியோர், சிறுவர் பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு எஸ்.பி., பரிசு வழங்கினார். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. எஸ்.பி., கூறுகையில், ''மாவட்டத்தில் பல இடங்களில் இதுபோல மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்'' என்றார்.

Advertisement