ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் ஓ.ஐ.சி., தீர்மானம்; நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்

14

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஓ.ஐ.சி., எனப்படும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. 'தன் குறுகிய மற்றும் பாரபட்சமான நோக்கங்களுக்காக, இந்த அமைப்பை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்திக் கொள்கிறது' என, குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்காசிய நாடான, ஈராக் தலைநகர் பாக்தாதில் ஓ.ஐ.சி., அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடவடிக்கை



குறிப்பாக, 'ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை நிராகரித்து, நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஈராக்கில் நடந்த ஓ.ஐ.சி., அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை; ஒருதலைப்பட்சமானவை. உண்மைக்கு புறம்பானவையும் கூட. இவை அனைத்தும் பாகிஸ்தானால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. தன் குறுகிய மற்றும் பாரபட்சமான நோக்கங்களுக்காக, ஓ.ஐ.சி., அமைப்பை பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த அனுமதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

பொருளாதார வளர்ச்சி



இந்த தீர்மானங்களை இந்தியா நிராகரிக்கிறது. இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க ஓ.ஐ.சி.,க்கு எந்த உரிமையும் இல்லை. ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகள். அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரங்களால் இந்த உண்மையை மாற்ற முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீரில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.

சுற்றுலா, போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் பலன்கள் மக்களை நேரடியாக சென்றடைந்து உள்ளன. இதற்கு மாறாக, பாக்., ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் மீது வன்முறை, அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளன. அங்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

குற்றச்சாட்டுகள்



தன் சொந்த நாட்டில் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் மத ரீதியான வன்முறைகள் மீதான சர்வதேச கவனத்தை திசைதிருப்பவே, இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முன்வைத்து உள்ளது. பாக்., பரப்பும் தவறான பிரசாரங்களுக்கு ஓ.ஐ.சி., தொடர்ந்து ஆதரவளிப்பது, அந்த அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இதன் உறுப்பு நாடுகள், இந்த அமைப்பை சீர்திருத்த முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement