கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கம்பைநல்லுார: கம்பைநல்லுார் அருகே, கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களிலுள்ள, 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் அணையிலிருந்து வினாடிக்கு, 2,253 கன அடி திறக்கப்பட்ட நீரால், கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்பெண்ணையாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இருமத்துார், கே.ஈச்சம்பாடி, மல்லமாபுரம், அக்ரஹாரம், பெரமாண்டப்பட்டி, பள்ளம்பட்டி, மஞ்சமேடு, டி.அம்மாபேட்டை உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement