நிதிசார் சேவை முகாம்: கலெக்டர்

கரூர்,:கரூர் கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும், மூன்று மாதங்களுக்கு நிதிசார் சேவை முகாம் நடக்கிறது. இதில், பிரதம மந்திரி, 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச இருப்பு தொகை இன்றி கட்டணமில்லா வங்கி கணக்கு தொடங்கலாம். அத்துடன், இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான விபத்து காப்பீட்டுடன் கூடிய இலவச அட்டையும் பெறலாம்.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில், 18 முதல், 50 வயது வரையிலான தகுதியுடையவர்கள் ஆண்டுக்கு, 436 ரூபாய் பிரீமியம் செலுத்தி, இரண்டு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு பெறலாம்.
'சுரக்ஷா பீமா யோஜனா' திட்டத்தில், 18 முதல், 70 வயது வரையிலானவர்கள் ஆண்டுக்கு வெறும், 20 பிரீமியத்தில், 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம். அடல் ஓய்வூதிய திட்டத்தில், 18 முதல், 40 வயது வரையிலானவர்கள் இணைந்து, மாதம், 1,000 முதல், 5,000 ரூபாய் வரை உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம்.
மேலும், 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகள், ஜன் தன் கணக்குகள் மற்றும் செயல்படாத வங்கி கணக்குகளுக்கு மறு கே.ஒய்.சி., மேற்கொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கியில் கோரப்படாமல் உள்ள வைப்பு தொகைகளை பெறுவதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement