ராமர் கோயில் விசில் கச்சேரிமழையிலும் பக்தர்கள் பரவசம்

கோவை: ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் கலாரத்னா ஐ தராபாத் குமாரவேலு சிவபிரசாத்தின் கர்நாடக விசில் கச்சேரி நடந்தது.

குமாரவேலு சிவபிரசாத்தின் விசில் ஒலி வெறும் சாதாரண விசில் சத்தம் போல் அல்லாமல், புல்லாங்குழலின் சப்தத்துக்கு இணையாக ஸ்ருதி லயத்துடன் ஒலித்தது. மூச்சை கட்டுப்படுத்தி விசில் சப்தத்தில் பாடல்களை பாடினார்.

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், ஷியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதரின் கர்நாடக இசை கீர்த்தனைகளையும், அன்னமாச்சார்யா, நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கினி கீர்த்தனைகள், தனது விசில் சப்தத்திலேயே பாடல்களாக பாடினார்.

எவ்விதத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து இசைப்பதற்காக, மூச்சை உள்ளிழுக்கும் போதும் விசில் எழுப்பும் தனித்துவமான முறையை கையாண்டார். அவருக்கு பக்க வாத்தியங்களாக வயலின் இசைக்கலைஞர் மாதவ், பாலக்காடு மகேஷ்குமார் மிருதங்கம், ஆலுவா கோபாலகிருஷ்ணன் கடம் வெள்ளிநேழி ரமேஷ் மோர்சிங் இசைக்க அரங்கமே களைகட்டியது. வெளியே மழை கொட்டியது. பார்வையாளர்கள் பாடலுக்கு பாடல் ரசித்து கைதட்டலை கொடுத்தனர்.

Advertisement