அரப்படித்தேவன்பட்டியில் நாடகமேடையில் செயல்படும் ரேஷன் கடை: அடிப்படை வசதிகள் இன்றியும் தவிப்பு

ஆண்டிபட்டி: குன்னுார் ஊராட்சி அரப்படித்தேவன்பட்டியில் சொந்த கட்டடம் இன்றி நாடகமேடையில் ரேஷன்கடை செயல்பகிறது. மேலும் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

ஆண்டிபட்டி ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் குன்னூர், அரப்படித்தேவன்பட்டி ஆகிய இரு கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். வைகை ஆற்றின் கரையில் உள்ள கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைக்கவில்லை. போர்வெல் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். வடிகால் வசதி இல்லாத குடியிருப்புகள், உடைந்த சாக்கடை, ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பை, எரியாத தெருவிளக்குகள் ஆகியவை சரி செய்யப்படாமல் பல மாதங்களாக உள்ளன. பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால் ரோட்டின் ஓரங்களையும் ஆற்றின் கரைகளையும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.

நாடகமேடையில் ரேஷன் கடை

மாயன், அரப்படித்தேவன்பட்டி: விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாக உள்ள கிராமத்தில் கழிவு நீரை கடத்துவதற்கு வடிகால் வசதி இல்லை. அரப்படித்தேவன்பட்டியில் மெயின் ரோட்டை ஒட்டிச்செல்லும் கால்வாய் வழியாக கழிவு நீரை கடத்த முடியும். கடந்த பல ஆண்டுகளாக இந்த பெரிய கால்வாய் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கிறது. கிராமத்தில் குடியிருப்புகள் தாழ்வாக இருப்பதால் கழிவு நீரை பெரிய கால்வாய் வழியாக கடத்த முடியாமல் பல இடங்களில் கழிவு நீர் தேங்குகிறது. மழைக்காலத்தில் குடியிருப்புகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து பாதிப்பு ஏற்படுகிறது. குடியிருப்புகளில் சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. கிராமத்தில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இட வசதி உள்ளது. ஆனால் புதிய கட்டிடம் கட்டாமல் நாடக மேடையில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை ரேஷன் கடைக்கு பயன்படுத்துகின்றனர். புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருளில் மூழ்கும் தெருக்கள்

கணேசன், அரப்படித்தேவன்பட்டி: கிராமத்தில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத் தொட்டி தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. குழந்தைகள் அங்கன்வாடி மையம் அருகில் உள்ளது. பழுதடைந்த மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்யாததால் குடிநீரில் கசடுகள் கலந்து வருகிறது. நடுத்தெருவில் வடிகால், சிறுபாலம் அமைத்து கழிவுநீரை கடத்த வேண்டும். ஆண், பெண்களுக்கு தனித்தனி சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும். கிராமம் பல இடங்களில் இரவில் இருளில் மூழ்கி விடுகிறது. எரியாத தெருவிளக்குகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும். கிராமத்தில் விசேஷ நிகழ்ச்சி நடத்துவதற்கு சமுதாயக்கூடம் கட்டித்தர ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.

Advertisement