தரையில் கடை விரிக்க 30,000 கட்டணுமா? பூ மார்க்கெட் வியாபாரிகள் கொந்தளிப்பு

கோவை: நவராத்திரி சரஸ்வதி, ஆயுதபூஜை கொண்டாட்டங்களை ஒட்டி நான்கு நாட்களுக்கு பூமார்க்கெட் அருகே தற்காலிக கடை அமைக்க ரூ. 10,000 முதல் 30,000 ரூபாய் வரை குத்தகைதாரர்கள் வசூலித்ததால் வியாபாரிகள் கொந்தளிக்கின்றனர்.

பண்டிகை காலங்களில் வழக்கமான 193 பூ கடைகளை தவிர, மார்க்கெட்டுக்கு வடக்கு மற்றும் தெற்கில் மேட்டுப்பாளையம் ரோட்டின் இரு பக்கங்களிலும் தற்காலிக கடைகள் அமைப்பது வழக்கம்.

அதற்கு வாடகையாக வியாபாரிகள் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிப்பர். அதை போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள் சங்கத்தினர் என்று பிரித்து கொள்வார்கள். இது ஆண்டாண்டு காலமாக நடக்கிறது.

இந்த ஆண்டு தற்காலிக தரைக்கடை அமைக்க மாநகராட்சி குத்தகை தாரரிடம் அனுமதி பெறுவதோடு அவர் நிர்ணயிக்கும் தொகையை செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை புகுத்தியுள்ளனர்.

அதன் படி தரைக்கடை அமைக்க ரூ. 10,000 லிருந்து 30,000 வரை நிர்ணயித்து வசூலித்தனர். இதற்கு தற்காலிக தரைக்கடை அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

”ஆண்டுதோறும் இப்படி கடை போட்டு வியாபாரம் செய்கிறோம். இதுவரை இவ்வளவு பெரிய தொகை கேட்டதில்லை. 30,000 வரை கேட்பது நியாயமா?

கடை போடும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. அந்த இடத்தில் சுங்கம் வசூலிக்க குத்தகைதாரருக்கு அதிகாரம் இல்லை. மாநகராட்சி தலையிட வேண்டும்” என்றனர்.

மாநகராட்சி உதவி கமிஷனர் நர்மதா சமீபத்தில் சுங்கம் வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக கூறியபோது, “பூ மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்க ரூ.65 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளனர். அவர்கள் விதிப்படியே கட்டணம் வசூலிக்கின்றனர். கூடுதலாக வசூலிப்பதாக புகார் வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறி இருந்தார்.

தற்போது 30 ஆயிரம் வசூலிப்பதாக கூறி இருப்பதால், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement