எஸ்.பி., முதல் போலீஸ் வரை ‘புட் பேட்ரோல்’: குற்ற சம்பங்கள் குறைந்துள்ளதால் மக்கள் வரவேற்பு

சிவகாசி: 0–-

மாவட்டத்தில் எஸ்.பி., முதல் போலீஸ் வரை அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் கடைபிடிக்கப்படும் 'புட் பேட்ரோல்' (நடந்தே சென்று ரோந்து பணியில் ஈடுபடுதல்) முறையால் சிறு சிறு குற்ற சம்பவங்கள் குறைந்ததற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் சிவகாசி விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட 7 சப் டிவிஷன்களில் 7 மகளிர் ஸ்டேஷன் உட்பட 55 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்டத்தில் ஹைவே பேட்ரோல் தவிர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு போலீஸ் ரோந்து வாகனம் மூலமாகவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது எஸ்.பி., முதல் போலீஸ் வரையிலான அனைவரும் 'புட் பேட்ரோல்' எனப்படும் நடந்தே சென்று ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி போலீசார் தினமும் மாலையில் 2 கி.மீ., வரை நடந்து சென்று ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் போலீசார், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சிறு சிறு குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களுக்கு நடந்து சென்று பணியில் ஈடுபடுகின்றனர்.

தவிர எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., என அனைவருமே இப்பணியில் ஈடுபடுகின்றனர். தவிர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இதனால் தற்போது பொது இடங்களில் மது அருந்துபவர்கள், புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் தகராறு உள்ளிட்ட சிறு சிறு குற்ற சம்பவங்களும் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது, தினமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாலும் தற்போது நடந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.. இன்ஸ்பெக்டர்கள் என உயர் அதிகாரிகளும் உடன் வருகின்றனர். இதனால் ஓரளவிற்கு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது, என்றனர்.

Advertisement