பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்

-நமது நிருபர்-

தீபாவளி பண்டியை முன்னிட்டு, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க இடம் ஒதுக்கி தர உத்தரவிடக்கோரி, சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் நடராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, செப்., 11ல் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் கூட்டிய கூட்டத்தில், 'பட்டாசு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.

கடைகள் ஒதுக்குவது தொடர்பான இ - டெண்டரில் பங்கேற்கும்படி அறிவுறுத்தி, மனுதாரர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜய்ஆனந்த் ஆஜராகி, ''இ - டெண்டர் நடைமுறை கண்துடைப்பாக நடத்த வாய்ப்பு உள்ளது'' என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, இ - டெண்டரை கண்காணிக்க இருப்பதாகவும், டெண்டர் அறிவிப்பை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு, நீதிபதி ஆஷா முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இ - டெண்டர் விபரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதை பார்வையிட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: எந்த காரணமும் இல்லாமல் டெண்டரை நிராகரிக்கவோ, ஏற்கவோ, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டிருந்த பிரிவுகள் நீக்கப்படுகிறது.

இந்த டெண்டரை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். அக்., 22ம் தேதி வரை பெறப்பட்ட டெண்டர் படிவங்களை, உயர் நீதிமன்ற பதிவாளர் சுபாஅன்புமணி வசம் ஒப்படைக்க வேண்டும்.

அவர், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், மனுதாரர் சங்க பிரதிநிதி ஆகியோர் முன் டெண்டரை திறந்து, அதில் உள்ள விபரங்களை அட்டவணையாக தயாரித்து, அக்., 27ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement