பயங்கரவாதிகளால் 3 பேர் சுட்டுக்கொலை; சடலங்களுடன் மணிப்பூர் முதல்வர் வீடு முன் மக்கள் போராட்டம்

மணிப்பூரில் இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி மாவட்ட வனப்பகுதியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 16 பேர் விறகு சேகரித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் அருபன் ரோனில் (35), லைரன்லக்பாம் இனாபி (51). சேத்ரிமயும் சுஷில் (32) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.

தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், கொல்லப்பட்டவர்களின் சடலங்களுடன் முதல்வர் கேம்சந்த் சிங் இல்லம் முன்பு குவிந்தனர். தாக்குதலை கண்டித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், போராடியவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.அதன் பின்னர், அங்கேயிருந்த சடலங்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

போலீசாரின் தாக்குதலில் போராட்டம் நடத்திய கிஷ் தேவன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிராம மக்களின் போராட்டத்தின் போது இல்லத்தில் முதல்வர் கேம்சந்த் சிங் இருந்தாரா என்பது பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை.

Advertisement