மூன்று வேளையும் உணவு வழங்க நெல்லை பாலு இலக்கு

மதுரை: ‘‘ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க விரும்புவதாக’’ மதுரையின் அட்சயப் பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகி நெல்லை பாலு தெரிவித்தார்.

இவர், ‘பாரதி யுவ கேந்திரா’ அமைப்பை துவக்கி, பார்வையற்ற 250 பேருக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி வழங்குகிறார். காஞ்சி பெரியவரின் பக்தராக ‘அனுஷத்தின் அனுகிரகம்’ அமைப்பை உருவாக்கி, ஆன்மிக பணியாற்றுகிறார். அழகர்கோவில் அருகே பொய்கைக் கரைபட்டியில் மஹா பெரியவருக்கு கோயில் கட்டி வருகிறார்.

அனுஷ நட்சத்திர நாளில் மஹா பெரியவரின் பாதுகைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்கிறார். பிறரை சமூகப் பணியாற்ற துாண்டும் வகையில், ஏப்.14, தமிழ்ப் புத்தாண்டு நாளில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் தலைமையில் சாதனையாளர்கள் 22 பேருக்கு ‘அட்சய சேவா ரத்னா’ விருது வழங்குகிறார்.

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள், அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு வழங்குகிறார். மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவரான பாலு, ‘அட்சயப் பாத்திரம்’ அமைப்பை மக்கள் இயக்கமாகவே மாற்றி விட்டார்.

இதன்மூலம் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை பகுதிகளில் உணவின்றித் தவிக்கும் ஆதரவற்றோர், மனநலம் பாதித்தோர், நோயாளிகளின் உறவினர்களுக்கு 2200 நாட்களுக்கு மேலாக மதிய உணவு வழங்கி வருகிறார். இவரது சேவைக்காக, மதுரை கலெக்டரிடம் ‘சிறந்த சமூக சேவகர்’ விருதை பெற்றாார்.

அவர் கூறுகையில், ‘‘தற்போது மதிய உணவு வழங்குவது போல, வருங்காலத்தில் ஆதரவற்றோருக்கு 3 வேளையும் உணவு வழங்கி மனிதநேயம் காப்பேன்’’ என்றார். தொடர்புக்கு 94426 30815.

Advertisement