தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

5

புதுடில்லி: தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவுறுத்தலில் கூறியதாவது:1995ம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க்( ஒழுங்கு முறை) சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் மற்றும் 1994 ம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் விதிகளை பல்வேறு தனியார் டிவி நிறுவனங்கள் பின்பற்றாதது அரசின் கவனத்திற்கு வந்தது.

ஒரே மாதிரியான தலைப்புகளில் ஒரே மாதிரியான செய்திகள் மற்றும் காட்சிகளை பல சேனல்கள் ஒளிபரப்பியது தெரிந்தது. டிவிக்களில் ஒளிபரப்பாகும் உள்ளடக்கத்தை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ விதிகளை அனைத்து தனியார் டிவி சேனல்களும் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை வந்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், வன்முறை காட்சிகள், குற்ற சம்பவங்கள் நேரலை, இயற்கை பேரிடர், இந்தியாவின் உண்மையான வரைபடங்கள் பயன்பாடு, மத நல்லிணக்கம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் அடையாளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மதவாத அல்லது தேச விரோத மனப்பான்மையை ஊக்கப்படுத்தவோ அல்லது தூண்டவோ இல்லை என்பதை டிவி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.செய்தி உள்ளடக்கத்தின் துல்லியம், உண்மைத்தன்மை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் ஏஐ கருவிகளை பயன்படுத்தலாம்.

செய்தி சேகரிப்பு, தொகுத்தல், தயாரிப்பு, ஒலிபரப்பு மற்றும் டிவி ஒளிபரப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். தங்களின் தலையங்கங்கள் மற்றும் உள்ளடக்கத்தை மறு ஆய்வு வறிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள், 1995ம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Advertisement