செவ்வாயின் நிலவை குறிவைக்கும் ஜப்பான்: மண் துகள்களை அள்ளிவர ராக்கெட் பாய்ந்தது

​டோக்கியோ: செவ்வாய் கிரகத்தின் நிலவை ஆராய்ந்து, அங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்கைக்கோளை, ராக்கெட் மூலம் ஜப்பான் விண்ணில் செலுத்தியது. சுமார் 5,400 கோடி ரூபாய் (578 மில்லியன் டாலர்) மதிப்பிலான இந்த மெகா திட்டத்தை, ஐந்து ஆண்டுகள் இலக்காகக் கொண்டு, அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா, செயல்படுத்தியுள்ளது

​செவ்வாய் கிரகத்தை சுற்றும் 'போபோஸ், டீமோஸ்' என்ற இரு நிலவுகள் குறித்து விஞ்ஞானிகளிடையே நீண்ட காலமாக பலத்த விவாதம் நடந்து வருகிறது. உருளைக்கிழங்கு போன்ற வடிவம் கொண்ட 'போபோஸ்' நிலவில் இதுவரை எந்த நாடும் தரை இறங்கியதில்லை. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் கூட செவ்வாயில் தரை இறங்கியுள்ளனவே தவிர, அங்கிருந்து மாதிரிகளை எடுத்து வந்ததில்லை.

​அந்தச் சாதனையை முறியடிக்க, ஜப்பான் விண்வெளி மையம், நாசா உள்ளிட்ட உலக விண்வெளி நிறுவனங்களுடன் கைகோர்த்து 'எம்.எம்.எக்ஸ்.,' என்ற விண்கலத்தை தனேகஷிமா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவியது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:



​ஐந்து டன் எடைகொண்ட இந்த விண்கலம் 2027ம் ஆண்டின் பிற்பகுதியில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும். ​போபோஸ் நிலவின் மேற்பரப்பில் பிரான்ஸ் - ஜெர்மனி இணைந்து உருவாக்கிய 'இடேபிக்ஸ்' என்ற சிறிய ரோவரை தரை இறக்கி ஆய்வு செய்யும். ​நிலவின் மேற்பரப்பில் இருந்து குறைந்தது 10 கிராம் அளவிலான தூசு மற்றும் பாறை துகள்களை சேகரித்துக் கொண்டு 2031ம் ஆண்டு பூமிக்கு திரும்பும்.

​ஏற்கனவே விண்கற்களில் இருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து சாதனை படைத்த அனுபவம் கொண்ட ஜப்பான், இத்திட்டத்தின் மூலம் சூரிய குடும்பம் மற்றும் செவ்வாய் கிரகத்தின் தோற்றம் குறித்த பல மர்மங்களை அவிழ்க்கும் என உலக விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

Advertisement