இயல்பு நிலைக்கு திரும்பியது மத்திய டில்லி போலீஸ் பாதுகாப்பு பணியும் தொடர்கிறது

புதுடில்லி: பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களால், இரண்டு வாரங்களுக்கும் மேலாக பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருந்த மத்திய டில்லி பகுதி, தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், முக்கியமான இடங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தொடர்ந்து பணியில் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், இதற்கு பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்தன. இதனால், மத்திய டில்லி பகுதயில் இம்மாத தொடக்கத்திலிருந்தே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. சன்சத் மார்க், ஜன்பத், பரகம்பா சாலை, மற்றும் கன்னாட் பிளேஸின் வெளிப்பகுதி மற்றும் வட்டப்பாதைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், பல பொது இடங்களும் மூடப்பட்டன.

நேற்று முன்தினம் சில இடங்களில் பாதுகாப்பு படையினர் முன்னெச்சரிக்கை நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். சில இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. ஜந்தர் மந்தர் மூடப்பட்டிருந்தது. டால்ஸ்டாய் மார்க் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது, மேலும் சென்ட்ரல் பார்க் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை.

சென்ட்ரல் பார்க்கில் பராமரிப்பு காரணமாக நேற்று முன்தினம் அடைக்கப்பட்டிருந்தது. பூங்கா பகுதிகளில், போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மத்திய டில்லியில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும், பாரகம்பா சாலை, இன்னர் சர்க்கிள், சன்சத் மார்க் மற்றும் ஜன்பத் உள்ளிட்ட பல சாலைகளின் ஓரங்களில், தடுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. ஆனால், நேற்று அதிகளவிலான போலீசார் காணப்படவில்லை. கன்னாட் பிளேஸின் வெளிவட்டப் பகுதியில், சஷாஸ்த்ர சீமா பல் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் பேருந்துகளில் அமர்ந்திருந்தனர்; சிலர் நடைபாதையில் நின்றுகொண்டிருந்தனர். போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படாவிட்டாலும், பணிக்காக வரவழைக்கப்பட்ட அனைத்து துணை ராணுவப் படை பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதாவின் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது குறித்த அறிவிப்புகள், சன்சத் மார்க்கில் ஒலிபெருக்கிகள் மூலம் செய்யப்படவில்லை.

Advertisement