மானிய விலை காஸ், உரம் கடத்தி விற்பனை 10 மாதத்தில் 4,054 சிலிண்டர்கள் பறிமுதல்

கோவை: கோவை மண்டலத்தில் மானிய விலை காஸ் சிலிண்டர்கள், உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கடத்தியது தொடர்பாக, இந்தாண்டு ஜன., முதல் அக்., 10 வரை 2,524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4,054 காஸ் சிலிண்டர்கள், 1,014 டன் உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் அரிசி, மானிய விலை உரங்கள், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை பதுக்கி, கடத்தி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய ஒன்பது அலகுகளிலும் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

4,054 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

மானிய விலை காஸ் சிலிண்டர்களை வணிக பயன்பாட்டுக்கு திருப்பிவிடுவதைத் தடுக்க நடத்தப்பட்ட சோதனைகளில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,054 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த கார்த்திகேயன், சேலத்தை சேர்ந்த சங்கர் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

1,014 டன் உரங்கள் பறிமுதல்

மானிய விலை உரங்களை கடத்தி வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,014 டன் உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரக் கடத்தல் தொடர்பாக நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிய விலையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும், கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என, உணவு கடத்தல் தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement