தேசிய நெடுஞ்சாலையில் நாற்று நடும் போராட்டம்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த எம்.என் குப்பத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளித்தென்னல் கெங்கையம்மன் கோவில் அருகே மழைக் காலங்களில் அப்பகுதியில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்பது தொடர் கதையாக உள்ளது.

இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அங்கு வழக்கம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலையில் மழைநீர் தேங்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.

இதனை கண்டித்து நேற்று காலை 9.15 மணியளவில் கங்காபுரம் கெங்கையம்மன் கோவில் அருகே அப்பகுதி மக்கள் மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த த.வெ.க., பிரமுகர் இரிசப்பன் தானாக முன்வந்து அங்கு சாலை நடுவே மழைநீர் தேங்காமல் ஜே.சி.பி., மற்றும் ரோலர் இயந்திரம் மூலம் சொந்த செலவில் சீரமைத்து தருவதாக உறுதி அளித்தார். இதனையேற்று கிராம மக்கள் 9.35 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement