‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டால் பணம் இழப்பு மூதாட்டியை கொன்று நகைகள் திருடியவர் கைது

திருவாரூர்: ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டில், ஏழு லட்சம் ரூபாய் இழந்ததால், கடன் தொல்லையில் சிக்கிய நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் மூதாட்டியைக் கொலை செய்து, ஏழு சவரன் நகைகளைத் திருடிய அறிவுமணி, 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, உத்தாணி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 55. கணவர் இறந்த நிலையிலும், இரு மகளுக்கும் திருமணமானதாலும், கலைச்செல்வி தனியாக வசித்தார்.

அக்., 17ம் தேதி இரவு, மகள்களிடம் போனில் பேசியுள்ளார். அக்., 18ம் தேதி காலை முதல், மகள்கள் இருவரும் போன் செய்தும், கலைச்செல்வி எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர்கள், உறவினர் கார்த்தியை வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறினர்.

அங்கு சென்ற கார்த்தி, கலைச்செல்வி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரில், வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கலைச்செல்வி அணிந்திருந்த, ஏழு சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அப்பகுதி ‘சி.சி.டி.வி’ கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒருவர் கலைச்செல்வியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டம், ராஜகிரியைச் சேர்ந்த அறிவுமணி என்பதும், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரிந்து, அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அறிவுமணி, ஆன்லைன் ரம்மி விளையாட்டில், ஏழு லட்சம் ரூபாய் இழந்ததால், வாடகை கொடுக்க முடியாமலும், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியாலும் தவித்து வந்ததுள்ளார். கலைச்செல்வி வட்டிக்குப் பணம் கொடுப்பதை, கலைச்செல்வி உறவினரான கார்த்தி மூலம் அறிந்து, அவருக்கு அறிமுகமாகினார்.

அதன்பின், கடன் வாங்க அடிக்கடி கலைச்செல்வி வீட்டுக்குச் சென்ற அறிவுமணி, அவர் தனியாக இருப்பதை அறிந்து, இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, நகைகளைத் திருடியதாக தெரியவந்தது.

அறிவுமணியை நேற்று கைது செய்த போலீசார், வீட்டில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement