புகுந்த வீட்டுக்கு ஹெலிகாப்டரில் தான் வருவோம்; மணப்பெண்களின் ஆசையை நிறைவேற்றிய மாப்பிள்ளைகள்
ஹெலிகாப்டரில் தான் வருவோம்; மணப்பெண்களின் ஆசை நிறைவேற்றம்
ராஜஸ்தான் மாநிலம், மேவாத் பகுதியில் நடந்த திருமண விழா, வலைதளங்களில் பரவி வருகிறது. மணமகள்களான சகோதரிகள் ஐனா, மவுசினா இருவருக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ரோஹில், சஹிர் என்ற சகோதரர்களுடன் திருமணம் நடந்தது. மணப்பெண்களின் நிபந்தனை ஒன்று மட்டுமே; 'திருமணம் முடிந்து எங்களை புகுந்த வீட்டுக்கு அழைத்து செல்லும்போது, ஹெலிகாப்டரில் தான் அழைத்து செல்ல வேண்டும்' என்று கூறி விட்டனர்.
இரு கிராமங்களுக்கும் இடையே நடந்து சென்று விடக்கூடிய துாரம் தான். எனினும், மனைவிமாரின் ஆசையை நிறைவேற்ற, மாப்பிள்ளைகள் இருவரும் சேர்ந்து, 5 லட்சம் ரூபாயில் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தனர். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்க, மணப்பெண்கள் இருவரும், மாப்பிள்ளைகளுடன் புகுந்த வீட்டுக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கினர்.
ஹர்திக் பாண்டியாவை சந்திக்க 2,400 கி.மீ., நடந்து வந்த ரசிகர்
கிரிக்கெட் ரசிகரான ரவிகுமார் ராவத்துக்கு, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா என்றால் உயிர்; எப்படியாவது அவரை நேரில் பார்த்து விட வேண்டும் என்பதற்காக, எதையும் செய்ய தயாராக இருந்தார்.
லக்னோவில் இருந்து நடந்தே மும்பைக்கு பயணித்தார்; அங்கு பாண்டியா இல்லை; பெங்களூரில் இருப்பதை அறிந்ததும், மீண்டும் நடந்தே புறப்பட்டார். இப்படி 2,400 கி.மீ., பயணித்த ரவிகுமார், கடைசியில் தன் ஆதர்ஷ நாயகனை சந்தித்தார். தன்னை பார்க்க பல ஆயிரம் கி.மீ., துாரம் அவர் நடந்து வந்ததை அறிந்ததும், பாண்டியா நெகிழ்ந்து போய் விட்டார். அவரை கட்டியணைத்து நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தவர், ஊர் திரும்புவதற்கு ரயில் டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்தார்.
ரவிகுமார் பதிவிட்ட இந்த சந்திப்பின் வீடியோக்கள், வலைதளங்களில் டிரெண்டிங் ஆகின. அவற்றில் இதய எமோஜியை பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் பாண்டியா.
பெற்றோரை மகிழ்வித்த மகன்; கனவு நிறைவேறியதில் நெகிழ்ச்சி
நடுத்தர குடும்பத்தினருக்கு விமானத்தில் பயணிப்பது இன்றும் கனவாகவே இருக்கிறது. 'இன்ஸ்டாகிராம்' பயனர் பாபி, தன் பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்ற பதிவு, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
'சிறுவனாக இருந்தபோது, வானில் விமானம் பறப்பதை கண்டால், என் குடும்பத்தினரையும் ஒரு நாள் விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று முணுமுணுத்துக் கொள்வேன்; அந்த கனவு இன்று நிறைவேறியுள்ளது.
என் தந்தையும், தாயும் விமானத்தில் மகிழ்ச்சியுடன் பயணிப்பதை கண்டேன்; என் உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. இது, அவர்களுக்கும் கனவு தான்; அதை நிறைவேற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு கனவு நிறைவேறி விட்டது; இன்னும் பல இருக்கின்றன' என்று கூறியுள்ளார் பாபி.
கடத்தல்காரர் சிக்கினார்; பிடித்தவர்களுக்கு பாராட்டு
டில்லி மெட்ரோ ஸ்டேஷனில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் காவலில் இருந்தனர். பயணி ஒருவரின் லக்கேஜை எக்ஸ்ரே இயந்திரத்தில் ஸ்கேன் செய்தபோது, சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பதற்கான ஒலி எழுப்பியது. போலீசார் உஷாரான நிலையில், லக்கேஜ் கொண்டு வந்தவர் ஓட்டம் பிடித்தார். உஷாரான படையினர், அந்த நபரை துரத்தினர்; மெட்ரோ நுழைவாயில் அருகே மடக்கிப் பிடித்தனர்.
அவரது லக்கேஜை திறந்து பார்த்தபோது, உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் , 155 கிராம் எடை கொண்ட தங்கப் பவுடர் இருந்தது. சிக்கிய நபர், மலேஷியாவில் வசிக்கும் என்.ஆர்.ஐ., என்பது தெரிய வந்தது. தப்பிய நபரை துரத்திப் பிடிக்கும் வீடியோவை சி.ஐ.எஸ்.எப்., வெளியிட்டு உள்ளது. அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலர், தக்க நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட படைவீரர்களின் பணியை பாராட்டி வருகின்றனர்.
தலைக்கேறிய போதையில் 'குடி'மகள் அட்டகாசம்
இந்தியா வந்த அமெரிக்கப் பெண் ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், டில்லி மகிபால்பூரில் செய்த அலப்பறை வலைதளங்களில் பரவி வருகிறது. சாலையோர சாக்கடையில் விழுந்த அவரது செயல்கள், அருவருப்பானதாக இருந்தன; வேடிக்கை பார்த்தவர்கள் முகம் சுளித்தனர்.
சாக்கடையில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்த அவரை, மீட்பதற்கு ஒருவர் முயற்சித்தார். அப்போது அந்த பெண், தன்னை மீட்க வந்தவரை திட்டித் தீர்த்தார்; வாக்குவாதமும் செய்தார். அதை பொருட்படுத்தாத பலரும் சேர்ந்து, அந்த பெண்ணை சாக்கடையில் இருந்து மீட்டனர்.
மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அந்த பெண், அமெரிக்க துாதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சாக்கடையில் நின்றபடி அமெரிக்க 'குடி'மகள் செய்த அட்டகாசம், கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அமெரிக்க பெண் டெல்லி சரக்கை குடித்ததனால் சாக்கடையில் விழுந்துள்ளார். நம் தமிழ்நாட்டு டாஸ்மாக் சரக்கை முகர்ந்து பார்த்தாலே சாக்கடையில் விழுந்திருப்பார்.
2400 கிலோமீட்டர் நடந்து வந்து பார்க்கும் அளவுக்கு ஒண்ணும் ஹர்திக் பாண்டியா ஒர்த் இல்லையே?
money matters. I remember one girl also said this rubbish in a tv show and got trolled some years age
திருமணத்துக்கு பெண் கிடைக்காதவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகி விட்டார்கள்