மின் தடை புகார்களுக்கு விரைவாக தீர்வு செயற்கை நுன்னறிவு மையம் அமைக்க முடிவு

சென்னை: மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை, துல்லியமாகக் கண்டறிந்து, விரைவாக தீர்வு காண, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு மையத்தை, மின் வாரியம் அமைக்க உள்ளது.

தமிழகம் முழுதும் மின் தடை, மீட்டர் பழுது உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 94987 94987 என்ற மொபைல் போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு, 24 மணி நேரமும் வரும் புகார்களை, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் கண்காணிக்கிறது.

அங்கு ஒரு ஷிப்டில், 100 பேர் என, மூன்று ஷிப்டாக 300 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சமீப காலமாக, மின் சாதனங்கள் பழுது, மின் பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்படும் மின் தடை அதிகரித்து வருகிறது. இதனால், ஒரே சமயத்தில் பலரும் தொடர்பு கொள்ளும்போது, மின்னகத்தில் இணைப்பு கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, புகார்களை உடனடியாக பெறவும், விரைவாக தீர்வு காணவும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் புகாரைப் பெறுவது, அலுவலகத்திற்கு தெரிவிப்பது தொடர்பான தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி, ஒருங்கிணைத்து விட்டால் போதும். பல சேவைகள் வாயிலாக, ஒரே நபர் புகார் அளித்தாலும், அதை உடனே கண்டுபிடிக்க இயலும்.

வலைதளங்களில் மின் வாரியம் தொடர்பான புகார், தகவல் யார் பதிவிட்டாலும், உடனே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனால், புகார்கள் விரைவாக பெறப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். புகாரின் உண்மைத் தன்மையும் துல்லியமாக உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement