வித்யாரம்பம்: கல்வியின் தொடக்கமும் ஆன்மீகத்தின் மகத்துவமும்

குழந்தைகளின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் திருப்பம் நிறைந்த ஒரு பருவம் மாணவப் பருவம்.
மனித வாழ்வின் அறிவுக் கதவுகள் திறக்கும் இந்த அற்புதக் கட்டத்தில், குழந்தைகளை 'அ, ஆ' என முதல் எழுத்துகளை எழுத வைத்து முறைப்படி கல்வியைத் தொடங்குவதே 'வித்யாரம்பம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த இனிய நிகழ்வை, தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் இணைந்து எட்டாவது ஆண்டாக சென்னையில் இன்று நடத்தியது.Latest Tamil Newsஇதில் சென்னை வடபழநி ஆண்டவர் கோவியில் நடைபெற்ற நிகழ்வில் தினமலர் வெளியீட்டாளர் எல.ஆதிமூலம்,ஐஐடி.,இயக்குனர் காமகோடி,மருத்துவர் செங்கோட்டுவேலன் உள்ளீட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளின் கைபிடித்து நெல்லில் அ,ஆ என எழுதவைத்து ஆசீர்வாதித்தனர்.
வந்த குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுப்பையும் டிசர்ட்டும் பெற்றோர்களுக்கும் சேர்த்து சிற்றுண்டியும் கூடவே போட்டோவுடன் கூடிய சான்றிதழும் வழங்கப்பட்டது.
'வித்யா' என்றால் கல்வி, 'ஆரம்பம்' என்றால் தொடக்கம். ஞானத்தின் வடிவாகத் திகழும் சரஸ்வதி தேவிக்கு உரிய விஜயதசமி நன்நாளில் இந்த வைபவம் நடத்தப்படுவது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் ஒரு புனிதமான பாரம்பரியமாகும்.
கல்வி என்பது வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடுவதில்லை; அது நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் மன அமைதியையும் உள்ளடக்க வேண்டும். அதனால்தான், கல்வியைத் தொடங்குவதற்கு ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த கோவில்களை நமது முன்னோர்கள் முதன்மையான தேர்வாகக் கருதினர்.Latest Tamil Newsகோவில்களில் ஒலிக்கும் வேத மந்திரங்கள், தூப தீப நறுமணம் மற்றும் இறைவனின் இருப்பு ஆகியவை குழந்தையின் மனதில் அமைதியையும் ஒருமுகப்படுத்தும் திறனையும் உருவாக்குகின்றன.
கல்விக்கடவுளான சரஸ்வதி, ஞானக் கடவுளான விநாயகர் மற்றும் குருவின் அருள் நிறைந்த சூழலில் அடியெடுத்து வைப்பது, குழந்தையின் எதிர்காலக் கல்விப் பயணத்தைச் சிறப்பாக அமைக்கும் என்பது நம்பிக்கை.
விஜயதசமி நாளில், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்கள் நிறைந்த ஆசீர்வாதங்களுடன் குழந்தைகளை அரவணைத்து, அவர்களின் பிஞ்சுக் கரங்களைப் பிடித்துத் தாம்பளத்தில் பரப்பப்பட்டுள்ள பச்சரிசி அல்லது நெல்லில் 'அ, ஆ' என்று எழுத வைப்பார்கள்.
நெல் மற்றும் அரிசி என்பது செழிப்பின் அடையாளம். அத்தகைய தானியத்தில் விரலால் எழுதத் தொடங்குவது, அந்த குழந்தைகளின் வாழ்க்கையில் அறிவும் செல்வமும் செழித்து வளரும் என்பதை உணர்த்துகிறது.
பெரியோரின் ஆசி: பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிகளின் கைகளைப் பிடித்து எழுதும்போது, குடும்பத்தின் ஆசிகளும் வழிகாட்டுதலும் குழந்தைக்கு முதன்முதலாகக் கிடைக்கிறது.
வித்யாரம்ப முறை தென்னிந்தியா மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களிலும் நீண்ட காலமாக மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவில், சோட்டானிக்கரை பகவதி கோவில் மற்றும் திரூர் துஞ்சன் பரம்பு ஆகியவை வித்யாரம்பத்திற்கு மிகவும் புகழ்பெற்ற இடங்களாகும். இங்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் விஜயதசமி அன்று வரிசையில் நின்று கல்வியைத் தொடங்குவர்.
தமிழ்நாட்டிலும் கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருவாடானை மற்றும் பல பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் இந்நிகழ்வு கோலாகலமாக நடக்கிறது. வடமாநிலங்களில் 'அக்ஷர அப்யாசம்' என்ற பெயரில் துர்கா பூஜையின் நிறைவுநாளில் இது விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
வித்யாரம்பம் என்பது வெறும் ஒரு சடங்கு மட்டுமல்ல; அது குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் ஒரு அழகான பண்டிகை. இந்நாளில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என மொத்தக் குடும்பமும் மிகுந்த மன மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கோவிலுக்கு வந்து கலந்துகொள்வர்.
குழந்தை முதல்முறையாக நெல்லில் எழுதும்போது குடும்பத்தினர் அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிப்பர். இது குழந்தைக்குத் தன் குடும்பத்தைப் பற்றிய பாதுகாப்பான உணர்வையும், கல்வியின் மீது ஒருவித மரியாதையையும் ஆர்வத்தையும் சிறுவயதிலேயே விதைக்கிறது.
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, ஒரு குழந்தையின் அறிவு ஊற்று பெருக்கெடுத்து ஓட வித்யாரம்பமே முதற்படியாகும். நாகரிகமும் தொழில்நுட்பமும் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், நம் கலாச்சாரத்தின் அடையாளமான இத்தகைய நற்செயல்களைக் கோவில்களில் நடத்தி, சான்றோரின் ஆசியோடு குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்குவது அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும்.
-எல்.முருகராஜ்

Advertisement