மம்தா கட்சியில் இருந்து விலகிய யூசுப் பதானுக்கு நிலம் பரிசு: குஜராத் பா.ஜ., அரசின் முடிவால் சர்ச்சை

18

வதோதரா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்கு பரிசளிக்கும் வகையில், வதோதராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை வழங்க குஜராத் அரசு முன்வந்துள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான், வதோதராவில், தன் வீடு அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான 10,527 சதுர அடி நிலத்தை வாங்க முயன்றார். ஆரம்பத்தில், வதோதரா மாநகராட்சி ஒப்புக் கொண்ட போதிலும், 2014ல் குஜராத் அரசு அனுமதி மறுத்தது.

அதன் பின், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த யூசுப் பதான், 2024 லோக்சபா தேர்தலில், அக்கட்சி சார்பில் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதே சமயம், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை யூசுப் பதான் ஆக்கிரமித்திருப்பதாக கூறி, வதோதரா மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இதை எதிர்த்து யூசுப் பதான் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இதனால், மம்தாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

குறிப்பாக, 20 எம்.பி.,க்கள் திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகி, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனர். அவர்களில், யூசுப் பதானும் ஒருவர். இந்த அரசியல் மாற்றத்தை அடுத்து, குஜராத் மாநகராட்சிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும் யூசப் பதான் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், சர்ச்சையில் இருந்த 10,527 சதுர அடி நிலத்தில், 5,382 சதுர அடி நிலத்தை அவருக்கு பரிசாக வழங்க குஜராத் அரசு முன்வந்துள்ளது. மீதமுள்ள 5,145 சதுர அடி நிலத்தை, 45 சதவீத கட்டண கழிவுடன், அவருக்கு கிரயம் செய்து வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து யூசுப் பதான் விலகிய நிலையில், அவருக்கு சாதகமாக மாநகராட்சி நிலத்தை ஒப்படைக்க குஜராத் அரசு முன்வந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement