புழல் சிறையில் வெளிநாட்டு கைதி மாயம்

புழல்: புழல் சிறையில் இருந்து வெளிநாட்டு கைதி ஒருவர் மாயமானது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, புழல் மத்தி ய சிறைச்சாலையில் தண்டனை, விசாரணை, மகளிர், வெளிநாட்டு கைதிகள் என பல பிரிவுகளில், 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

இதில், வெளிநாட்டு கைதிகள் பிரிவில், நேபாளம், நைஜீரியா, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், திருட்டு, போதை பொருள் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு 7:00 மணிக்கு சிறை காவலர்கள், கைதிகளின் எண்ணிக்கையை சோதனை செய்தபோது, வெளிநாட்டு கைதிகள் பிரிவில் ஒருவர் குறைவாக இருப்பது தெரிந்தது.

இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பலக்கட்ட பாதுகாப்பு கொண்ட புழல் சிறையில் இருந்து அவர் தப்பிவிட்டாரா அல்லது சிறைக்குள்ளேயே மறைந்துள்ளாரா என, சிறை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement