சல்மான் கானை முதலில் குறிவைத்த கொலைகார கும்பல்: வெளியான பரபரப்பு தகவல்கள்
மும்பை: முதலில் நடிகர் சல்மான் கானை சுட்டுத்தள்ள திட்டமிட்ட கூலிப்படையினர், பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக பின்வாங்கி, இளம் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு:
டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்திய கும்பல், முதலில் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டை குறிவைத்து, துப்பாக்கிச்சூடு நடத்த நோட்டமிட்டுள்ளது. ஆனால், கடந்த 2024 துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு சல்மான் கானுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, வீடு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் ஆயுதம் தாங்கிய போலீசார் ஜீப்பில் பின் தொடர்வதாலும், வீட்டை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததாலும், சல்மான் கானை நெருங்க முடியாமல் அக்கும்பல் திட்டத்தை கைவிட்டது.
இன்ஸ்டா மூலம் சிக்கிய டைகர் ஷெராப்:
சல்மான் கான் தப்பியதால், அடுத்த இலக்காக டைகர் ஷெராப் அந்த கும்பலின் கண்ணில் பட்டுள்ளார். டைகர் ஷெராப் மும்பை ஜூஹு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு, ஞாயிறுதோறும் வழக்கமாக விளையாட வருவது, அவரது ரசிகர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அவருக்கு பாதுகாப்பு பெரிதாக இல்லாததால், அவரை எளிதில் தீர்த்துக்கட்டலாம் என கணக்கு போட்டு காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பகிரங்க மிரட்டல்:
இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த அனில் பண்டிட், ஹர்மன் சந்து ஆகியோர் சமூக வலைதளங்களில் இதற்கு பொறுப்பேற்று பகிரங்க மிரட்டல் விடுத்தனர். டைகர் ஷெராப்பை தொலைபேசியில் எச்சரித்தும் அவர் கேட்காததால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர்கள், சினிமாவில் சல்மான் கானுடன் தொடர்பில் இருப்பவர்கள், அவருடன் நடிப்பவர்கள் அடுத்த இலக்காக இருப்பார்கள் என்றும், பாலிவுட்டுக்கு பகிரங்க சவால் விடுத்தனர்.
7 பேர் கைது:
துப்பாக்கிச்சூடு நடத்திய ஹரியானாவைச் சேர்ந்த இருவர் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வைத்து போலீசார் வளைத்துப் பிடித்தனர். இவர்களுக்கு துப்பாக்கிகளை சப்ளை செய்ததாக ராதா, பபிதா என்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குணால், சுமித் பிடிபட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை