காத்திருப்பு அரியக்குடி ரயில்வே கேட் முன் வாகனங்கள் மேம்பாலம் இல்லாததால் அவதி தொடர்கிறது

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி ரயில்வே மேம்பாலம் மற்றும் காரைக்குடி புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.

காரைக்குடியில் உள்ள இலுப்பக்குடி, அரியக்குடி, பொன்நகர், லட்சுமி நகர் பகுதி வளர்ந்து வரும் பகுதிகளாக உள்ளன. சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இப்பகுதிகள் தற்போது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சிகளை சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காரைக்குடியில் இருந்து அரியக்குடி, இலுப்பக்குடி செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது.

ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே கேட் மூடப்படுவதால், ஒரு மைல் தூரம் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை தினமும் நிலவுகிறது.அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். விழாக்காலங்களில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

அரியக்குடி ரயில்வே கேட் வழியாக, ராமேஸ்வரம், விருதுநகர் உட்பட தினமும் 15 க்கும் ஏற்பட்ட ரயில்களில் சென்று வருகின்றன. ரயில்கள் வரும்போது 5 முதல் 7 நிமிடத்திற்கு ரயில்வே கேட் மூடப்படுகிறது. கேட் திறந்ததும்காத்துக் கிடக்கும் வாகனங்கள் முண்டியடித்துச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் சீராக அரைமணி நேரமாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் அரியக்குடி ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று பல்வேறு கட்சியினரும் தெரிவித்து வரும் நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேம்பால வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement