விவசாயிகள் சங்கம் மறியல் 70 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த மறியலில், 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில், த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின் படி, விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவும், மின்துறையின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழகம் முழுவதும், 600க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதன்படி மாவட்டத்தில், விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. விழுப்புரம் நான்கு முனை சாலை சந்திப்பில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் காலை, 11:45 மணிக்கு போராட்டம் துவங்கியது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் சிவராமன், சகாபுதீன் தலைமை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் முருகன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி உள்ளிட்டோர் கோரிக்கை உரையாற்றினர்.
மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், கோவிந்தசாமி, ராஜாராமன், சவுந்தர்ராஜன், சுந்தர், விமல், கிசான் சங்கம் பாலசுப்ரமணியன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மின்துறையின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யவும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரியும், த.வெ.க., அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
சிக்னல் சந்திப்பில், சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை, விழுப்புரம் டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் வைத்து, மாலை விடுவித்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் காலை, 11:45 முதல் மதியம், 12:15 வரை, விழுப்புரத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.