டைகர் ஷெராப் மீதான தாக்குதலுக்கு பஞ்சாபில் இருந்து வந்த ஆயுதங்கள்: விசாரணையில் 'திடுக்' தகவல்
-நமது நிருபர்-
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜூஹு பகுதியில் வசித்து வரும் பிரபல ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது, கடந்த 18ம் தேதி மூன்று பேர் அடங்கிய கும்பல் இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். டைகர் ஷெராபின் ஓட்டுனர் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு குஜராத் சிறையில் உள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
தாக்குதல் நடத்திய பீஹாரின் பெகுசாராயை சேர்ந்த ரித்திக் என்ற ரோஷன், ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த ரேஹான் உட்பட மூன்று பேர் ராஜஸ்தானின் கோட்டாவில் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரும் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மூவரையும், வரும் 31ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதலுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் குறித்த விபரங்கள் தெரியவந்தன. குணால், சுமித், ராதா, பபிதா என அடையாளம் காணப்பட்ட அவர்கள், டில்லி மற்றும் ஹரியானாவில் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளியான அனில் பண்டிட், இந்த சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலையில், அனிலை குணால் சந்தித்த போதே இந்த சதித் திட்டம் உருவாகியுள்ளது.
அவரின் அறிவுறுத்தலின்பேரில், இரு வாரங்களுக்கு முன்பு பஞ்சாபின் அமிர்தசரசில் ஒரு இடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை, கைதான குணால் மற்றும் சுமித் சென்று எடுத்தனர்.
'டெட் லெட்டர் பாக்ஸ்' எனப்படும், சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் சந்திக்காமலோ, அல்லது ஒருவரைப் பற்றி மற்றவருக்கு தெரியாமலோ, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பொருளை எடுக்கும் ரகசிய ஏற்பாடு வாயிலாக இந்த ஆயுத சப்ளை நடந்துள்ளது.
ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த தன் காதலியான ராதாவையும், அவர் தோழி பபிதாவையும் ஆயுதக் கடத்தலுக்கு குணால் பயன்படுத்தியுள்ளார். கடந்த 15ம் தேதி மும்பை வந்த பெண்கள் இருவரும் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்து, தாக்குதல் நடத்திய நபர்களிடம் ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.
டைகர் ஷெராப் மீதான தாக்குதலுக்கு முன், பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோரின் வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கடினம் என தெரியவந்ததை அடுத்து, டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.