ஆர்.டி.ஓ., இ-சலானை அனுப்பி பேக்கரி ஊழியரிடம் மோசடி

ஈரோடு:தாளவாடியில், போலியாக வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) இ--சலானை அனுப்பி, பேக்கரி நிறுவன ஊழியரிடம், 3.38 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து, ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியை சேர்ந்த மாதேவா மகன் லிங்கராஜூ, 26. தாளவாடியில் உள்ள பேக்கரியில் பணிபுரிகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கடந்த, 16ம் தேதி போக்குவரத்து விதிமுறை மீறியதால், அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அத்துடன் வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ., இ--சலான்) லிங்க் அனுப்பியிருந்தனர். இதை உண்மையென நம்பிய லிங்கராஜூ, அதை பதிவிறக்கம் செய்து, லிங்க் மூலம் செயலிக்குள் சென்று பார்த்தார். பின்னர், அபராதம் செலுத்தாமல் அதிலிருந்து வெளியேறினார்.
அந்த செயலி மூலமாக லிங்கராஜூவின் மொபைல்போனை, 'ஹேக்' செய்து, கடந்த 16 முதல் 18 வரை அவரது வங்கி கணக்கில் இருந்து, மூன்று லட்சத்து, 38 ஆயிரத்து, 684 ரூபாயை மோசடியாக வேறு கணக்கிற்கு மாற்றியுள்ளனர். லிங்கராஜூ அவரது வங்கி கணக்கில் இருப்பை சரி பார்த்தபோது, பணம் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது தெரியவந்தது.
போலி ஆர்.டி.ஓ இ--சலானை அனுப்பி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்ததை உணர்ந்த லிங்கராஜூ, ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் கடந்த, 20ம் தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.

Advertisement