பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,643 கன அடியாக அதிகரிப்பு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம், 61 அடியாக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், போதிய நீர் வரத்து இல்லாமல் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
எனவே, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 938 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 3,643 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம், 61.24 அடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையில், 7.6 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 55 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement