லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆருடம்

விழுப்புரம்: தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தல் நடக்கும் என, லட்சுமணன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழாவில் அவர் பேசியதாவது:

மாற்றம் என வந்து, ஏமாற்றத்தை தந்துள்ள த.வெ.க., ரீல்ஸ் ஆட்சியின் அவலத்தை மக்களிடம் விளக்க வேண்டும்.

அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வு, பால் தட்டுப்பாடு, தமிழக மக்களை வதைக்கிறது. ரேஷன் கடையில் வெங்காயம், அரிசி வழங்குவதாக கூறிவிட்டு ஏமாற்றியுள்ளனர். மக்களைப் பற்றி சிந்திக்காமல் த.வெ.க., அரசு உள்ளது.

அரசு துறைகளில் அதிகாரிகள் மாற்றம், பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து என தமிழகத்தை 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தலில் த.வெ.க., நிர்வாகி கைதாகியுள்ளார். மாற்று கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும், தீய திருட்டு சக்தியாக உள்ளனர். இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் பல நாட்கள் பிரசாரம் செய்தும், தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை தொட முடியவில்லை. த.வெ.க.,வின் பொய் பிம்ப அரசியல் வீழ்ச்சிக்கு வந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும். த.வெ.க., வீழ்ந்து, தி.மு.க., ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement