மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
மும்பை: நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற சம்பவம் ஹிந்தி சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 10 பேர் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின. அது பற்றி போலீஸ் கூறியதாவது; துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஆட்களை நியமித்துள்ளது. ஹாரில் உள்ள அமீர் கான் வீட்டையும், மும்பையில் உள்ள ரன்பீர் கபூர் வீட்டையும் இந்த கும்பல் கண்காணித்து வந்துள்ளது. டைகர் ஷெராப் அவர்களின் உண்மையான இலக்கு அல்ல. போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த பூல் சிங், 18, ரெஹான் அன்சாரி,18, இந்த சதித்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மும்பையின் தாதர் பகுதிகளில் ஒரு மாதமாக பல்வேறு விடுதிகளில் தங்கியிருந்தனர். டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள், அவர்களுக்கு துப்பாக்கி கிடைத்துள்ளது. வனப்பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை பார்த்துள்ளனர். அப்போது, ஒரு துப்பாக்கி பழுதடைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.
டில்லி, ஹரியானாவில் இருந்து ஆயுதங்களை விநியோகித்தவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்களிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.