ஸ்மார்ட்போன் புகைப்படக் கண்காட்சி!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களே இல்லை; அதில் புகைப்படம் எடுக்காதவர்களும் இல்லை. ஆனால், நம்மில் பெரும்பாலோர் அந்த கேமராவின் ஆற்றலை செல்ஃபி எடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். "நம் கையிலுள்ள சாதாரண போன் கேமராவிற்கு இதுவே அதிகம்" என்ற எண்ணமே இதற்கு முக்கியக் காரணம்.Latest Tamil Newsஆனால், நம் பாக்கெட்டில் இருக்கும் அதே ஸ்மார்ட்போனைச் சரியான முறையில் கையாண்டால், சர்வதேச புகைப்பட ஆர்வலர்களின் கவனத்தையே ஈர்க்க முடியும் என்பதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றுவரும் இந்தத் தனித்துவமான புகைப்படக் கண்காட்சி!Latest Tamil Newsஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வெறும் மொபைல் கேலரிக்கும் சமூக வலைத்தளங்களின் எல்லைக்கும் மட்டும் சொந்தமானவை அல்ல என்பதைத் தத்ரூபமாக நிரூபித்துக் காட்டியுள்ளார் நீலகரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த தேவராஜ் பண்ட்லா. 'ஆர்ட் ஆஃப் சீயிங் வித் யுவர் ஸ்மார்ட்போன்' (Art of Seeing with your Smart Phone) அமைப்பின் நிறுவனரான இவர், மொபைல் புகைப்படக் கலையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.Latest Tamil Newsசிங்கப்பூருக்கு அவர் மேற்கொண்ட பல பயணங்களின் போது, தனது ஸ்மார்ட்போன் கேமராவுடன் அந்த நகர வீதிகளில் உலா வந்துள்ளார். குறிப்பாக, தெருக்களின் இயல்பான விஷயங்களை படம்பிடிக்கும் 'ஸ்ட்ரீட் போட்டோகிராபி' கலையில் முத்திரை பதித்துள்ளார். எடுத்த படங்களை வழக்கம்போல இன்ஸ்டாகிராமிலோ அல்லது முகநூலிலோ பதிவிட்டு லைக்குகளைப் பெறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவற்றில் சுமார் 100 படங்களை பிரம்மாண்டமான அச்சுப் படங்களாக மாற்றி லலித் கலா அகாடமியில் அரங்கேற்றியுள்ளார். இது ஸ்மார்ட்போன் புகைப்பட உலகத்தில் ஒரு துணிச்சலான, முதன்மையான முன்னெடுப்பாகும்!Latest Tamil Newsசிங்கப்பூரின் நவீன அழகை மிகத் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் தன் கேமராவில் வடித்துள்ளார் தேவராஜ். குறிப்பாக, கேபிள் காரில் பயணம் செய்யும் போது அவர் எடுத்த இரவு நேரச் சிங்கப்பூர் காட்சிகள் பார்ப்போரை வியப்பின் உச்சிக்கு அழைத்துச் செல்கின்றன.
இயந்திரத்தனமான நகரமாக அறியப்பட்டாலும், சிங்கப்பூர் நிர்வாகம் இயற்கைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும், பூங்காக்கள் மற்றும் தோட்டங்களின் பசுமையையும் இயற்கை நேசிப்பாளரின் பார்வையோடு கவித்துவமாகப் படமாக்கியுள்ளார்.
நூறு படிக்கட்டுகளைத் தாண்டித்தான் மாணவர்கள் ஒரு பள்ளிக்கூடத்திற்குள் நுழைய முடியும் என்ற சுவாரஸ்யமான காட்சியைப் படம்பிடித்ததோடு, அதற்கு பின்னால் உள்ள கதையையும் அவர் விவரிக்கும் விதம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படி ஒவ்வொரு படமும் தனித்துவமான ஒரு கலை நயத்தையும், ஆழமான கதையையும் பேசுகின்றன.
புகைப்படக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும், "ஸ்மார்ட்போனிலும் இவ்வளவு அழகாகப் படமெடுக்கலாமா?" என்ற பாடத்தைப் படிக்கவும், சிங்கப்பூரின் கண்கவர் அழகை ஒரே இடத்தில் கண்டுகளிக்கவுமாக... பார்வையாளர்களுக்கு இது 'ஒரே கல்லில் மூன்று மாங்காய்' தரும் அற்புதமான வாய்ப்பாகும்.
இந்தக் கண்காட்சியின் வெற்றிக்குத் தொழில்நுட்ப ரீதியாகவும் சில முக்கியக் காரணங்கள் உண்டு. 'சால் ட்ரீ' நிறுவனத்தைச் சேர்ந்த நரசிம்மன் மிக நேர்த்தியாகத் தயாரித்துள்ள இந்த பெரிய வடிவ அச்சுப் படங்கள், ஸ்மார்ட்போன் புகைப்படங்களின் காட்சி அழகை முழு வீச்சில் வெளிக்கொணர்கின்றன. 'பெலிக்ஸ் & ஸ்கோலர்' வழங்கிய உயர்தர ஊடகப் பொருட்களில்தான் இந்த அச்சுப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போனில் மொபைல் திரையில் பார்க்கும் படங்கள், பெரிய அச்சுப் படங்களாக உருமாறும் போது எத்தகைய அழுத்தமான தாக்கத்தை நம் மனதில் ஏற்படுத்துகிறது என்பதை அனுபவிக்க இந்தக் கண்காட்சிக்குச் செல்வது நிச்சயமாகப் பலன் தரும்.
திரையைத் தாண்டி, நிஜ உலகத்தில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு அற்புதமான ஸ்மார்ட்போன் புகைப்படக் கொண்டாட்டம் இது!
இடம்: லலித் கலா அகாடமி, கீரிம்ஸ் சாலை, சென்னை.
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை.
நிறைவு நாள்: அக்டோபர் 22.
தேவராஜ் பண்ட்லாவுடன் தொடர்பு கொள்ள:9790902672
-எல்.முருகராஜ்

Advertisement