பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, பல்வேறு இடங்களில் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

கண்டமங்கலம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி தயார் நிலையில் ஆயிரம் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள் தயார் நிலையில் வைத்துள்ளதை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் ஆகிய பேரிடர்கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான ஜெனரேட்டர், குடிநீர், மின்சாரம், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகளை உறுதி செய்து, பாதுகாப்பு மையத்தை பயன்பாட்டிற்கு ஏற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

வானுார் அருகே பொம்மையார்பாளையம் கடற்கரை பகுதியில் மக்கள் பாதுகாப்பு , அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின் நெசல் ஏரி, ஒழிந்தியாம்பட்டு ஏரி, அன்னம்பாக்கம் ஏரிகளில் நடக்கும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும், நீர்நிலையின் கொள்ளளவை மேம்படுத்துவதோடு, நீர்வரத்து பாதைகள், கரைகளை முறையாக பராமரித்து நீண்டகால நீர்வள பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஏரியின் நீர்வள பாதுகாப்பு, புனரமைப்பு பணிகளை உரிய திட்ட வழிகாட்டுதலின்படி மேற்கொண்டு, மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் நீர்நிலையை பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை புனரமைப்பு, கால்வாய் துார்வாருதல், மழைநீர் சேகரிப்பு, வெள்ளத்தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பணிகளின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, நீர்நிலைகளின் வரத்து, உபரிநீர் வெளியேற்று பாதைகள் வழியாக மழைநீர் வெளியேறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

வெள்ளம், புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக அவர், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், பருவ தேர்வுகளில் எடுத்த மதிப்பெண், மாணவர்களின் வருகை குறித்து ஆய்வு செய்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாகளர் சக்தி முருகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், வானுார் தாசில்தார் லட்சாதிபதி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement