வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தொகுதிகளுக்கும், அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஓட்டுச்சாவடிகளை முறைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைக்கும் பணிகள் புதுச்சேரியில் நவ., 2ம் தேதி தொடங்குகின்றன. அதையடுத்து, ஒருங்கிணைந்த வரைவுப் பட்டியல் நவ., 12ம் தேதி வெளியிடப்படும். வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம்.

பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது டிசம்பர் 28-க்குள் தீர்வு காணப்படவுள்ளது. இறுதியாக, முழுமையான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 4 ம் தேதி வெளியிடப்படும்.

இத்திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதையும், பட்டியல் துல்லியமாகவும் தற்போதைய விவரங்களுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் ஓட்டுசாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.

ஓட்டுசாவடிகளைச் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். 2027 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு முன்பாக 18 வயதை நிறைவு செய்யும் வாக்காளர்கள் தகுதி நாளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

மேலும், 2027 ஏப்ரல்1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை நிறைவு செய்து தகுதி பெறவுள்ளவர்களும் முன்கூட்டியே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை படிவம்–6 மூலமாகவும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள் படிவம்– 6 ஏ மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

முன்மொழியப்பட்ட பெயர் சேர்த்தல்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது பெயரை நீக்கக் கோர படிவம் 7-ஐப் பயன்படுத்தலாம். முகவரி மாற்றம், பதிவுகளில் திருத்தம் செய்தல், விவரங்களைப் புதுப்பித்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு மாற்று அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் குறியிடுதல் ஆகிய தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் படிவம் 8-ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுமக்கள் இந்த சேவைகளுக்காக https://voters.eci.gov.in என்ற வாக்காளர் சேவை இணையதளம் அல்லது ECINET செயலி வாயிலாக இணையவழியில் விண்ணப்பிக்கலாம். உதவி, சந்தேகங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவரங்களுக்குப் பொதுமக்கள் 1950 என்ற வாக்காளர் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டதும், பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யும் காலத்தில், அவற்றின் பட்டியல்கள் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும், வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் வாயிலாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தகுதியுள்ள அனைத்துக் குடிமக்களும் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சரியாக இடம்பெற்றுள்ளதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement