கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி

தஞ்சாவூர்: நாடு முழுதும், பணியின் போது, உயிரிழந்த போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினருக்கு, ஆண்டுதோறும் அக்., 21 காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்துாபியில், பணியின் போது வீரமரணம் மற்றும் உயிரிழந்த போலீசாருக்கு, 66 குண்டுகள் முழங்க, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக், எஸ்.பி., சுந்தரவதனம் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், ஓராண்டில் நான்கு பேர் பணியின் போது உயிரிழந்தனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும், அவர்களது குடும்பத்தினருக்கு டி.ஐ.ஜி., மரியாதை செலுத்தினார்.

அப்போது, தஞ்சாவூர் ஆயுதப்படை வாகன பிரிவில் பணியாற்றிய, எஸ்.எஸ்.ஐ., சுரேஷ்குமார் என்பவர், கடந்த ஆக., 20ல் பணியின் போது உயிரிழந்தார். இதையடுத்து, சுரேஷ்குமாரின் மனைவியும், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரான பகவதிசரணம், அழுதபடியே அணிவகுப்பில் கலந்துக்கொண்டு, கணவருக்காக மலர்வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினர். இச்செயலால், சக போலீசார் கண்கலங்கி நின்றனர்.

Advertisement