திருநெல்வேலியில் அதிக மழைப்பொழிவு எங்கு தெரியுமா?

திருநெல்வேலி; வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் திருநெல்வேலியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையில், ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக 128 மி.மீ., மழை பதிவானது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 112 மி.மீ., காக்காச்சியில் 88 மி.மீ., நம்பியாறு அணை பகுதியில் 80 மி.மீ., மாஞ்சோலை எஸ்டேட்டில் 68 மி.மீ., மழை பெய்துள்ளது.

அம்பாசமுத்திரத்தில் 62 மி.மீ., பாளையில் 61.20 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 57.80 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 50 மி.மீ., மணிமுத்தாறில் 46.40 மி.மீ., திருநெல்வேலியில் 39.20 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் 18 மழைமானி நிலையங்களில் மொத்தம் 954 மி.மீ., மழையும், சராசரியாக 53 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 48 அடியில் இருந்து 50.80 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 60 அடியில் இருந்து 61 அடியாகவும் உயர்ந்துள்ளது.

குளிக்கத்தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

நேற்று முதல் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அருவியைப் பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

Advertisement