இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
போத்தனுார்: கோவையில், ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உயிரிழக்கும் தருவாயிலும், பிரேக்கை அழுத்தி பிடித்ததால், 86 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை மதுக்கரை பாலத்துறையில் இருந்து நேற்று காலை, 10 மணிக்கு அரசு டவுன் பஸ் (தடம் என்: 66) காந்திபுரம் நோக்கி சென்றது. சிங்காநல்லுார் ராமானுஜம் நகரை சேர்ந்த மார்ட்டின், 45, பஸ்சை ஓட்டினார். குறிச்சி, முருகா நகரை சேர்ந்த பரமேஸ்வரன், 55 நடத்துனராக இருந்தார்.
பஸ் குனியமுத்துார் சுண்ணாம்பு காளவாய் அருகே வந்தபோது டிரைவர் மார்ட்டினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த அவர் பிரேக்கை அழுத்திய நிலையில், திடீரென மயங்கி, ஸ்டியரிங் மீது சாய்ந்தார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. ஆட்டோ டிரைவர் வெளியே குதித்தார். எனினும், பஸ்சில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்.
பஸ் சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு கார், மூன்று பைக்குகள், நடந்து சென்ற ஒருவர் மீது மோதியது. பஸ்சிலிருந்த பெண் பயணி, பஸ்சிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது, சாலையில் தவறி விழுந்து காயமடைந்தார். பஸ் சிறிது துாரம் ஓடி நின்றது. அருகிலிருந்தோர் காயமடைந்தவர்கள் மற்றும் பஸ் டிரைவரை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
டிரைவர் மார்ட்டின், வழியிலேயே இறந்தார். பெண் பயணி உள்ளிட்ட இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவ்வழியாக வந்த வாகனங்கள் புட்டுவிக்கி ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். விபத்தில் உயிரிழந்தது குனியமுத்துார், அன்னமநாயக்கர் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நுார்முகமது, 51 என தெரிந்தது. குனியமுத்தூர், சுண்ணாம்பு காளவாயை சேர்ந்த அப்பாஸ், 45, பஸ்சில் பயணித்த கணியூர் சங்கோதிபாளையத்தை சேர்ந்த நாகேஸ்வரி, 55 ஆகியோர் காயமடைந்தனர்.
கண்டக்டர் பரமேஸ்வரன் கூறுகையில், ''பஸ்சில் 86 பயணியர் இருந்தனர். நான் பின்னால் இருந்தபோது, திடீரென டிரைவர் சீட் அருகேயிருந்த பெண்கள் சத்தமிட்டனர். பயணியரை விலக்கி நான் சென்றபோது, மார்டின் பிரேக்கை அழுத்திய நிலையில் ஸ்டியரிங்கில் மயங்கி கிடந்தார். பஸ் வேகம் குறைந்து வாகனங்கள் மீது மோதியது. மார்டின் உயிரிழக்கும் நேரத்திலும், பிரேக்கை பிடித்து, பயணியரின் உயிரை காப்பாற்றியுள்ளார்,'' என்றார்.
பயணியரின் உயிரை காத்த மார்ட்டினுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். ஆட்டோ டிரைவர் நுார்முகமதுவுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
மேலும்
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
குமரியில் ரயில்தடம் புரண்டு விபத்து; ரயில்சேவை பாதிப்பு
-
அமெரிக்கா தலைமையில் முத்தரப்பு பேச்சு: புடின், ஜெலென்ஸ்கி சம்மதம்
-
திருநெல்வேலியில் அதிக மழைப்பொழிவு எங்கு தெரியுமா?
-
தவறான விளம்பரங்கள், விதி மீறல் குற்றச்சாட்டு; நெஸ்லே இந்தியா, வெல்நெஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
-
உ.பி.,யில் மின்சாரம் தாக்கிய 3 பேர் பலி; துர்கா சிலை ஊர்வலத்தின் போது சோகம்