வீடியோ காலில் தோன்றிய நித்யானந்தா புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கு அருளாசி

புதுச்சேரி: ஏம்பலத்தில் உள்ள கைலாசா நித்யானந்தா தீயான பீடத்தில் நடந்த, ஆயுத பூஜை விழாவில், வீடியோ காலில் தோன்றிய, நித்தியானந்தா, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., மோகன்தாசை வரவேற்று அருளாசி வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி ஏம்பலத்தில் உள்ள கைலாசா நித்யானந்தா தியான பீடத்திற்கு, குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தியான பீட நிர்வாகிகள், கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, புதுச்சேரிக்கு நித்யானந்தா வருகை தர உள்ளதாகவும், இது தொடர்பாக, மத்திய அரசிடம் பேசி வருவதாகவும், புதுச்சேரி வரும்போது, மாநில அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி ஏம்பலத்தில் உள்ள கைலாசா நித்தியானந்தா தீயான பீடத்தில், நவராத்திரி கொலு விழா மற்றும் ஆயுத பூஜை விழா கடந்த 19ம் தேதி நடைபெற்றது.

விழாவில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., மோகன்தாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அப்போது, கைலாசாவிலிருந்து வீடியோ காலில் தோன்றிய நித்தியானந்தா, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., மோகன்தாஸ் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு கைலாச சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்துவதாக தெரிவிக்க, அங்குள்ள நிர்வாகிகள் இருவருக்கும் சால்வை அணிவித்தனர்.

தொடர்ந்து, நித்தியானந்தா காணொளி மூலமாக, அமைச்சர் நமச்சிவாயத்திற்கும், மோகன்தாஸ் எம்.எல்.ஏ.,விற்கும், அருளாசி வழங்கினார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, புதுச்சேரி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,விற்கு, அருளாசி வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைராலாகி வருகிறது.

Advertisement