கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் சுற்று சுவர் அமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் பாதுகாப்பற்ற நிலையால், சுற்று சுவர் அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரை பகுதியில் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லுாரியில் சுற்று சுவர் இன்றி காணப்படுகிறது.

இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. கல்லுாரியை சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து புதர்களாவும், வயல்வெளி பகுதிகள் இருக்கிறது. தற்போது கல்லுாரி கட்டடத்தை சுற்றிலும் செடிகள், புற்கள் வளர்ந்து காணப்படுகிறது.

இதனால் பாம்பு போன்ற விஷ சந்துகள் கல்லுாரி வளாகத்தை சுற்றிலும் அதிகளவில் உலா வருவதற்கான வாய்ப்புகளாக அமைந்துள்ளது. கல்லுாரி வளாக பகுதியில் மாணவ, மாணவிகள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் போது அச்சுத்துன் பயிற்சி மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. தற்போது கல்லுாரி வளாகத்தில் 100 மாணவிகள் தங்கி பயிலும் விடுதியும் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ]

இரவு நேரங்களிலும் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, அரசு கல்லுாரியில் சுற்று சுவர் அமைத்து பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement