கோவில் சொத்துகள் வழக்கின் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டும்; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

திருப்பூர்: கோவில் சொத்துகள் வழக்கின் சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட கட்சிகளின் ஆட்சியில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, அவற்றை அபகரித்து, பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகம் உள்ளிட்டவை கட்டுவது என, பலவாறாக கோவில் சொத்துக்களை சூறையாடியது.

அவ்வகையில், ஈரோடு மாவட்டம், கொடிமுடி - நாகபாளையம் மாரியம்மன், பொன்னாச்சியம்மன் கோவில் சொத்தை தற்காலிக அறங்காவலரை நியமித்து, கலெக்டர் வாயிலாக தாசில்தாருக்கு தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து, அந்த இடத்தில் தாசில்தார் அலுவலகம் கட்டியது.

இது குறித்து, கோவில் பரம்பரை அறங்காவலர் தொடர்ந்த வழக்கில், 'கோவில் சொத்துகள் கோவிலுக்கே; இனாம் சொத்துகள் கோவிலுக்கே சொந்தம். தமிழக அரசும், அறநிலையத்துறையும் பாதுகாவலர்கள் மட்டுமே; உரிமையாளர் அல்ல.

மாநில அரசு, தன் அதிகாரிகள் வாயிலாக கோவில் சொத்தை அபகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என சுப்ரீம் கோர்ட் சம்மட்டியால் அடித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகாவது, ஹிந்து சமய அறநிலையத்துறை திருந்த வேண்டும்.

தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டும். கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதுடன், அரசு ஆக்கிரமித்துள்ள சொத்துக்களையும் கோவில் வசமே ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement