ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஜி.எஸ்.டி., சாலையில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி .,சாலையில் பைக் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில், படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காட்டாங்கொளத்துாரில் இருந்து வண்டலுார் நோக்கி, இன்று மதியம், ஒரே குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், இரண்டு ஆட்டோக்களில் சென்றனர்.

அப்போது கூடுவாஞ்சேரி மின்வாரியம் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில், முன்னால் சென்ற வாலிபர், திடீரென பைக்கை நிறுத்தினார்.

பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதி, தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர், ஆட்டோவில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்பதற்காக நான்கு ஆம்புலன்ஸ்கள் போட்டி போட்டு விரைந்து வந்தன.

போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனைவரையும் மீட்டனர்.

ஆனால், படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்சில் செல்ல மறுத்து வாக்குவாதம் செய்தனர். போலீசார் சமாதான பேச்சு நடத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement