விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது

வானுார்: விவசாய நிலங்களில் தொடர் காப்பர் ஒயர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

வானுார் அடுத்த ராவுத்தன்குப்பம், ஆகாசம்பட்டு, புள்ளிச்சப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்த காப்பர் ஒயர்கள் இம்மாத துவக்கத்தில் தொடர்ந்து திருடு போனது.

இது குறித்து பாதிக்கப்பட்ட துருவை கிராமத்தை சேர்ந்த சரவணன், ஆகாசம்பட்டு கிராமத்தை சேர்ந்த தாமோதரன், தருண்ராஜ், பாலசுப்ரமணியன், சேகர், உதயன் உள்ளிட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.

கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் வானுார் அருகேயுள்ள வி.ஜி.பி., கார்டனில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த போது, அங்கிருந்த மூவரும் போலீசாரை கண்டதும் தப்பித்தனர்.

போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், வானுார் அடுத்த காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா மகன் சுரேஷ், 27; சென்னை, பாரிமுனை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் விக்கி, 19; மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரிய வந்தது.

மேலும், விசாரணையில், அவர்கள் புளிச்சப்பள்ளம், ஆகாசம்பட்டு பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்த காப்பர் ஒயர்களை திருடி உருக்கி பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement