அண்டை மாநிலங்களுடன் சகோதரத்துவம் முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்

மைசூரு: ‘‘அண்டை மாநிலங்களுடன் சகோதரத்துவம் பேண வேண்டும்,’’ என, ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைத்த பின், முதல்வர் சிவகுமார் கூறினார்.

அவர் கூறியதாவது:

மாநில மக்கள் ஆசியால் தான், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நானும், என் அமைச்சரவை சகாக்களும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் பங்கேற்று உள்ளோம். மாநிலத்தில் நல்ல மழை பெய்து, பயிர் விளைச்சல் செழிக்க சாமுண்டீஸ்வரியிடம் பிரார்த்தனை செய்து உள்ளேன்.

மைசூரில் நடப்பது அரசு, அரச குடும்பத்திற்கான தசரா இல்லை. மக்களுக்கான தசரா. இது அனைவரின் பண்டிகை. கலை, இலக்கியம், கலாசாரத்திற்கு முன்னுரிமை அளித்து உள்ளோம். அண்டை மாநில முதல்வர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

திரைப்பட நடிகர், நடிகையர், விளையாட்டு வீரர், வீராங்கனையர், முப்படைகளை சேர்ந்தவர்கள், வெளிநாட்டு துாதர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

அன்னை சாமுண்டீஸ்வரி ஆசி அனைவரும் கிடைக்கட்டும்; வாழ்க்கை செழிப்பாக அமையட்டும். அடுத்த சில ஆண்டுகளுக்கு, ஜம்பு சவாரியை சுமக்கும் பெருமை பிரஷாந்த் யானைக்கு கிடைக்கட்டும்.

இம்முறை தமிழகம், கேரளம் மாநிலங்களின் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் இடம்பெற்றுள்ளன. அண்டை மாநிலங்களுடன் சகோதரத்துவம் பேண வேண்டும். காவிரி நீர் கர்நாடகா, தமிழகம், கேரளா மாநிலங்களில் பாய்கிறது. பெங்களூரில் வசிக்கும் 45 லட்சம் மக்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களை நாம் வரவேற்கிறோம்.

வீடியோக்கள் மூலம் மைசூரு தசராவின் பெருமை நாடு முழுவதும் இளைஞர்கள், இளம்பெண்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். சிறந்த ரீல்ஸ் வீடியோவை உருவாக்கியவர்களுக்கு பரிசு வழங்கப்படும். விமான சாசக கண்காட்சி, கம்பாலா போட்டிகளை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement