கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் புல் நறுக்கும் கருவி
கள்ளக்குறிச்சி: சிறு மற்றும் குறு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில், புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
கலெக்டர் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில், 70 பயனாளிகளுக்கு மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனப்பயிர் பயிரிடும் நிலை கொண்டவராக இருக்க வேண்டும். கருவி வைக்கும் இடத்தில் மின்சார வசதி இருக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில், இத்திட்டத்தில் பயன் பெறவில்லை என கால்நடை உதவி மருத்துவர் மற்றும் உதவி இயக்குநரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும்.
தீவனப்புல் கருவிக்கான மொத்த செலவில் 50 சதவீதம் பங்குத் தொகை பயனாளி செலுத்த வேண்டும். பெண் விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்களது கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று போட்டோ, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல், மொபைல் எண், நிலத்திற்கான சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியற்றுடன் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.