வீடு இடிக்கப்பட்ட 42 குடும்பத்தினர் மாற்றிடம், இழப்பீடு கேட்டு மனு

நாமக்கல்:'42 குடும்பங்களின் வீடு இடிக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவீரர் மக்கள் கழக தலைவர் பாஸ்கரன் கூறியதாவது:

நாமக்கல் அடுத்த குப்பம்பாளையத்தில், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த, 42 குடும்பங்கள், 50 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, 1998ல், அரசு சார்பில், 42 குடும்பங்களுக்கும், நத்தம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இதில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த, 17ல், அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டதால், வீதியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலம் தொடர்பான நடைமுறைகளில் தவறு நடந்திருந்தால், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, அரசின் பட்டாவை பெற்று அதனை நம்பி வாழ்ந்த அப்பாவி மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பது நியாயமல்ல.
வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு காரணமானவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement